
மழை, வரம் எனக்கு.
அது கேட்காமல் எனக்கு கொடுத்ததெல்லாம் புன்னகை மட்டும் தான்.
மழையை எப்போதும் நான் இயல்பாக பார்த்ததில்லை.
நான் அதை ரசித்திருந்த அனைத்து கணங்களிலும் பல வண்ணப் படங்களின் கலவை இருந்தது.
அண்ணாந்து மழை வாங்கிய இரு சக்கர பயணங்களும்,
தொப்பலாக கரைந்த நடு ரோட்டு நடைகளும்,
ஏதோ ஒரு கதாநாயகனின் காட்சி தொடர்ச்சியாகவே இருந்திருக்கிறது.
மழையை எப்பொது நான் நானாக ரசித்திருந்தேன்?
திரைப்படங்கள் என் கண்களுக்குள் கலக்காத என் பிஞ்சு காலத்தில் அது நிகழ்ந்திருக்கலாம்.
அந்த பதிவுகள் எல்லாம் முன்னெப்போதோ பெய்த மழையால் கழுவப்பட்டிருந்தது.
வேண்டுமானால் அது இன்று தான் நடந்தது என்று சொல்லலாம்.
குறிப்பாக சொன்னால் அதுவும் இன்றைய மழை நின்ற பிறகு தான்!
என் நினைவுகள் இவ்வாறு விரிந்து விழைந்தது.
மழை குளிப்பாட்டிய கண்ணாடி கதவுகள்;
ஒர் நிசப்த இரவு;
அரை இருட்டில் தெரியும் திறந்த சன்னல்கள்;
அதில் சொட்டும் மழையின் கடைசி துளிகள்;
ஒரு தேநீர் கோப்பை;
கடைசியாக இந்த கவிதையின் தலைப்பு.
இப்போது மெதுவாக அரும்புகிறது என் பால்ய கால நினைவுகள்,
நான் எட்டி பிடித்து இழுக்கும் மரக்கிளையில் தொங்கும் மழை துளிகள் தொட்டவுடன் என் உடலெல்லாம் சிலிர்த்து விடும்.
அந்த ரசனை என்னுடையதாக இருக்கலாம்,
யாரும் எந்த திரைப்படத்திலும் முயற்சிக்காமல் இருந்திருந்தால் அல்லது
நான் யாரிடமிருந்தோ தொடர்ந்திருக்காமல் இருந்தால்.
மழை பெய்யும் பொழுதை விட நின்ற பிறகு தான் அழகாக இருக்கிறது.
நான் அதன் கடைசி துளிகளின் காதலன்.